Wednesday, March 26, 2014

அரசு பங்கு விற்பனைக்கு கண்காணிப்புக் குழு: மத்திய நிதி அமைச்சகம் முடிவு

அரசு பங்கு விற்பனையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை நியமிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசு பங்கு விற்பனையைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பங்குகளை விற்பனை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கிகள் உள்ளிட்ட பிற அரசு நிறுவனங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களின் செயல்பாடுகளை புதிதாக நியமிக்கப்பட உள்ள ஓய்வு பெற்ற அதிகாரி கண்காணிப்பார்.

இதற்காக மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் ஒப்புதலோடு தனியார் நிறுவனங்களை வெளியிலிருந்து கண்காணிக்கும் அமைப்பாக நியமிப்பது குறித்தும் நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் அரசு பங்கு விலக்கல் தொடர்பான டெண்டர் முறைகள், அதை செயல்படுத்துவது, ஏலத்தில் ஈடுபடும் நிறுவனங்களைக் கண் காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.
இந்த கண்காணிப்பு அமைப்பில் அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரிகள் அல்லது தனியார் துறை நிறுவனங்களில் திறம்பட பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கை தொடங்கும் முன்பு ஒவ்வொரு முறையும் விற்பனை வங்கி, பங்குகளை வாங்கும் நிறுவனம், இடைத் தரகராக செயல்படும் நிறுவனங்கள் உள்ளிட்டவை நியமிப்பதைப் போல கண்காணிப்பு அமைப்பும் நியமிக்கப்படும். இந்த அமைப்பின் கால வரையறை மூன்று ஆண்டுகளாகும்.